ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவீதி உலா
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரைஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரையில் ,பழமை வாய்ந்த ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிதிலமடைந்திருந்த இக்கோயிலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் திருப்பணி செய்து புதுப்பித்தனர். இக்கோயிலின் உற்சவ மூர்த்திகள் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக கும்பகோணத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இக்கோயிலில் கடந்த 50 ஆண்டுகளாக உற்சவமூர்த்திகள் புறப்பாடு நடைபெறவில்லை. கிராம மக்களின் முயற்சியால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு உற்சவ மூர்த்திகள் சிலை கும்பகோணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உற்சவ மூர்த்திகளான சத்தியபாமா ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து உற்சவமூர்த்திகள் கோயிலை சுற்றி கொண்டுவரப்பட்டு, கோயில் வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டார். அங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஒன்று கூடி பெருமாளின் புகழ் பாடும் பாசுரங்கள், கீர்த்தனைகளை பாடியவாறு வீதியுலா நடைபெற்றது. கோயிலின் நான்கு வீதிகளை சுற்றி வந்த பெருமாளுக்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.