வாணியம்பாடி: மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 வயது பள்ளி சிறுமி உயிரிழந்தார். அதே கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி மரணம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2024-01-31 10:03 GMT

 சுதேஷ்னா

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியகுரும்பதெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா இவரது மகள் சுதேஷ்னா (11). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்றார். பள்ளி மாணவிக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார்.  இந்தநிலையில் இன்று காய்ச்சல் அதிகரித்து வந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் அதே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்குமா? என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிராம ஊராட்சி செயலாளர் ரவி என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது 5 க்கும் மேற்பட்டோர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் தற்பொழுது சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தி கொசு மருந்து அடிப்பது தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது உள்ளிட்ட வை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் கூறுகையில் கிராமத்தில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் சுகாதாரத் துறையினர் உடனடியாக இப்பகுதிக்கு மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதியிடம் கேட்டபோது அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை எனவும் மேலும் அப்பகுதியில் நாளை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உயிரிழந்த பள்ளி மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News