திருத்தணியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்
திருத்தணி முருகன் கோயில் கடைகளுக்கான ஆன்லைன் டென்டரை ரத்து செய்து பொது ஏலம் நடத்த கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணியில் முருகன் கோயிலுக்கு சொந்தமான 13 கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் பொது ஏலம் மூலம் குத்தகை உரிமம் பெற்று வியாபாரிகள் தேங்காய் கடை, பூஜை பொருட்கள் கடை, மலர்கள், பழங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான கடை அறைகள் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் நேற்று மதியம் 12 மணிக்கு இணைய வழி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இந்த இணைய வழி ஒப்பந்தப் புள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஸ்பி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 30க்கும் மேற்பட்டோர் மலைக்கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து பொது ஏலம் நடத்தி கடைகள் உரிமம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால், மலைக்கோயில் அலுவலகத்தில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.