வேலூர்: 1,060 இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றம்
வேலூர் மாவட்டத்தில் 1,060 இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசு மற்றும் பொதுக்கட்டிடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை அரசு மற்றும் 982 பொது இடங்களிலும், 78 தனியார் இடங்களிலும் என மொத்தம் 1,060 இடங்களில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும்,தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விளம்பரங்கள் மேற்கொண்டது தொடர்பாக காவல் நிலையங்களில் 19 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.