வேலூர்: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி

ஆன்லைனில் பணத்தை இழந்து விட்டதாக தனியார் நிறுவன ஊழியர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-24 02:06 GMT

மாவட்ட காவல் அலுவலகம் 

வேலூரை சேர்ந்த 28 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை மர்மநபர்கள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துள்ளனர். அந்த குரூப்பில் மர்மநபர்கள் பங்குச்சந்தை முதலீடு, ஆன்லைன் வர்த்தகம் குறித்த குறுந்தகவல்கள் வந்தன.இதனிடையே அந்த குரூப்பை சேர்ந்த மர்மநபர்கள் இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை தொடர்பாக குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.

இதை நம்பிய அவர் அந்த மர்மநபரிடம் பேசி உள்ளார். தொடர்ந்து மர்மநபர் அவருக்கு ஒரு லிங்க் அனுப்பி அதில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில் கூறப்படும் பணிகளை செய்து முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். அதன்படி அவரும் அதில் சென்று கூறப்பட்ட பணிகளை செய்து முடித்தார். தொடர்ந்து பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். அவரும் அதை நம்பி ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்து 668 முதலீடு செய்து பணிகளை செய்து முடித்தார்.

ஆனால் அவர் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறமுடியவில்லை. அவர் மர்மநபர்களை தொடர்பு கொண்டபோது கூடுதலாக பணத்தை முதலீடு செய்ய வற்புறுத்தினர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News