கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
செய்யாறில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்ட கிளை சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்திடம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திமாவட்ட தலைவர் கே வெங்கடேசன் தலைமையில் நடந்தது. வட்டக் கிளை தலைவர் ஆர் சேகர், போராட்டக் குழு தலைவர் பி.கணபதி, மாவட்டத் துணைத் தலைவர் மு.வாசு, மாவட்ட பொது செயலாளர் ஆர்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் மு.இளங்கோ வரவேற்றார் .
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஸ்ரீ தரன் பங்கேற்று உண்ணாவிரத நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் கிராம ஆணையரின் ஆணைக்கு முரணாக கிராம உதவியாளர்களை பணி ஒதுக்கப்பட்ட கிராமத்தில் பணி புரிய விடாமல் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் பணி செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கும் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.