பணி நிறைவு நாளில் பாசத்தை பொழிந்த மக்கள்
உசிலம்பட்டி அருகே பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருக்கு கிராம மக்கள் பரிவட்டம் கட்டி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து பிரியா விடை அளித்த சம்பவம் கிராமப்புற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் இருந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது சின்னக்குறவகுடி கிராமம்.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு தலைமை ஆசிரியராக வடுகபட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி பணியாற்றி வருகின்றார்.இவர் கடந்த 24 வருடங்களாக இப்பள்ளியில் பணியாற்றிய நிலையில் நேற்று பணி நிறைவு பெற்றார்.
இவருக்கான பிரிவு உபச்சார விழா சின்னக்குறவகுடி பள்ளியில் நடைபெற்றது.இந்நிலையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் ஒன்றிணைந்து தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்திய தலைமை ஆசிரியருக்கு பித்தளை அண்டா குண்டா மற்றும் சேலைகளை சீர் வரிசையாக கொடுத்து அசத்தினர்.மேலும் தலைமை ஆசிரியை செல்வசிரோன்மணிக்கு பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து தலைமை ஆசிரியருடன் கிராமத்தையே ஊர்வலமாக வலம் வந்தனர்.பின்னர் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் தலைமைசிரியருக்கு பல்வேறு பரிசுப்பொருட்களை மாணவ மாணவிகள் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.