மயானத்துக்கு பாதை கேட்டு மூதாட்டி உடலுடன் கிராம மக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் ஊராட்சிக்கு உட்ப்பட்ட முத்தானூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி நேற்று இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அப்போது ஒரு தரப்பினர் பிரச்சினைக்குரிய பாதை வழியாக செல்லக்கூடாது என்றனர். இதனால் கிராம மக்கள் மூதாட்டி உடலை அங்கேயே வைத்து விட்டு பனமரத்துப்பட்டி- கம்மாளப்பட்டி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சேலம் ரூரல் துணை போலிஸ் சூப்பிரண்டு அமல அட்வின், தாசில்தார் தாமோதரன், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மயானத்துக்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறினர். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், தற்போது அதே பாதையில் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்யும்படி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து செல்லம்மாள் உடல் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.