அனுமதிக்கப் பட்ட அளவுக்கு மேல் கனிமங்களை வெட்டி எடுத்தது குறித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்
Update: 2024-01-03 11:30 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சி எளையாம் பாளையம் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகு செயல்படாமல் இருந்து வந்த இந்த கல்குவாரிகள் மீண்டும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த கல்குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக கிராம மக்கள் கூறி வந்த நிலையில் அனுமதிக்கப் பட்ட, சட்டத்திற்கு உட்பட்ட அளவுக்கு குவாரிகளில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா சட்ட விதிகளுக்கு உட்பட்டு குடியிருப்புகள் மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்ற இடங்களில் குவாரிகள் செயல்பாட்டால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த் துறையினர் உரிய அளவீடு செய்து அனுமதி வழங்க வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உள்ளிட்டோர் நேரில் வந்து 45 நாட்களுக்குள் அளவீடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது 85 நாட்களாகியும் எந்த அளவீடும் செய்து கொடுக்கப் படவில்லை என்பதால் உடனடியாக உரிய அளவீட்டினை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவீடு செய்து தரும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். போராட்டக் குழு தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள் பூசன், செந்தில்குமார், தமிழ்நாடு விவசாய சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, நாமக்கல் புறநகர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் பெரியசாமி ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.