வைகை நீரை கண்மாய்க்கு கொண்டு சென்ற கிராம மக்கள்

அரணையூர் கண்மாயில் குழாய்கள் அமைத்து ஒரு பகுதிக்கு மட்டும் தண்ணீர் செல்வதை தடுக்க கோரி விவசாயிகள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகளே மண் மூட்டைகளை அடுக்கி தடுத்தனர்.

Update: 2023-12-26 03:57 GMT

மண் மூட்டைகள் அடுக்கி தடுப்பு ஏற்படுத்திய விவசாயிகள் 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர் கண்மாய் மூலம் அரணையூர், கருங்சுத்தி கிராமங்களில் 750 ஏக்கர் விலை நிலங்கள் பயன் பெறுகின்றன. இக்கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. கபிரியேல்பட்டினம் பகுதியில் இருந்து சாலைகிராமம் கண்மாய்க்கும், அரணையூர் கண்மாய்க்கும் தனித்தனியாக கால்வாய் பிரிக்கின்றன. இதில் அரணையூர் கால்வாய் கொங்கம்பட்டி, கல்லூரணி வழியாக அரணையூர் கண்மாயை அடைகிறது. இக்கால்வாய் 3 மீட்டர் அகலத்தில் 3 கிலோமீட்டர் நீளத்தில் உள்ளது. இந்நிலையில் இக்கால்வாயில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் அனுமதியின்றி சிறிய குழாய்களை பதித்து பாதை அமைத்துள்ளனர். இதனால் கால்வாய் சுருங்கி மழை நீர் கூட செல்ல முடியாமல் அங்கங்கே தேங்கி விடுகிறது. இந்நிலையில் வைகை ஆற்றிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆக்கிரமிப்பால் அரணையூர் கால்வாயில் செல்லாமல், சாலைகிராமம் கால்வாயில் மட்டும் அதிக அளவில் சென்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் அரணையூர், கருஞ்சுத்தி விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி கால்வாய் பிரியும் இடத்தில் சாலைகிராமம் கால்வாயில் மண் மூடைகளை அடுக்கி அடைத்தனர். இதனால் ஆரணையூர் கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் சென்றதால் ஆங்காங்கே இருந்த அடைப்புகள் சரியாகின.

Tags:    

Similar News