விழுப்புரம் : கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் கைது

விழுப்புரம் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் உத்திரபிரதேசத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2024-06-18 06:54 GMT

கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் , சபாபுல்

விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தாலுகா ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த நசீர் மகன் சதாப் (வயது 35), முரதாபாத் மாவட்டம் கஜிபுரா பகுதியை சேர்ந்த அனிஸ் மகன் இர்பான் (42), புதுடெல்லி சபாபுல் ராஜீவ் நகரை சேர்ந்த அமீர் ஹூசைன் மகன் அலாவுதீன் என்கிற அலி (27) ஆகிய 3 பேர் கடந்த மாதம் 23-ந் தேதி விழுப்புரம் மேற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இவர்களுடன் டெல்லி பொல்ஸ்வன் டைரியை அடுத்த சுவாமி சாரதா னந்தா காலனி பகுதியை சேர்ந்த நரேந்திரகுமார் மகன் சந்தோஷ்குமார் (27), உத்தரப்பிரதேச மாநிலம் தாக்கியா ஹுசைன்ஷா பகுதியை சேர்ந்த மோமீன் மகன் சபாபுல் (25) ஆகிய இருவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

மேலும் விசாரணையில், கடந்த 21.8.2023 அன்று திருவெண்ணெய்நல்லூர் அருகே பையூரை சேர்ந்த சீனிவாசன் (55) என்பவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு காமராஜர் வீதியில் உள்ள நகை கடைக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை வைத்துவிட்டு கடை யின் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகை, பணத்தை சந்தோஷ்குமாரும், சபாபுல்லும் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடிக்க விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டு அந்த தனிப்படை போலீசார் பல இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த சந்தோஷ்குமார், சபாபுல் ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றினர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News