சாமித்தோப்பில் விதிமீறல் - அய்யாவழி மக்கள் குழு கண்டனம்
இந்துக்களின் தர்மம் சனாதனம். இதனை எந்த நிலையிலும் அகிலத்திரட்டு அம்மானை கண்டிக்கவோ, வேறுபடுத்தவோ இல்லை. இதனை பிரச்சினையாக்குவது தனி நபர் ஒருவர் தான். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை சாமி தோப்புக்கு வரவழைத்து அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தவிர்த்து அவர்களுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை நாங்கள் கண்டிக்கிறோம் என அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவச்சந்திரன் சாமிகள் தெரிவித்தார்.
அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவச்சந்திரன் சாமிகள் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது:- அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழாவை கவர்னர் மாளிகையில் நடத்தியதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அய்யா வழி சேவை அமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அய்யா வைகுண்டர் தான் கடவுள் என்பதை கவர்னர் உணர்ந்து இருக்கிறார். அகிலத்திரட்டு அம்மானையில் எங்குமே சனாதனம் பற்றி குறிப்பிடவில்லை. சனாதனம் என்பது மக்களின் வாழ்வியல். மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை போதிப்பது தான் சனாதனம். இந்துக்களின் தர்மம் சனாதனம். இதனை எந்த நிலையிலும் அகிலத்திரட்டு அம்மானை கண்டிக்கவோ, வேறுபடுத்தவோ இல்லை. இதனை பிரச்சினையாக்குவது தனி நபர் ஒருவர் தான்.
சாமிதோப்பு என்பது தலைமைப்பதி அல்ல. பஞ்சபதிகள் என்று அழைக்கப்படுவதில் ஒரு பதி தான் சாமிதோப்பு. உலக மக்கள் அனைவருமே அய்யாவின் வாரிசுகள் தான். இந்த உண்மைக்கு மாறாக பொய் பேசி முன்னுக்குப் பின் முரணாக பேசுவதே சிலரின் வழக்கம். அய்யாவை பின்பற்றும் 7 ஆயிரம் பதிகள் உள்ளன. இதில் சாமிதோப்பு என்பது அய்யா தவம் இருந்த இடம் என்பதால் முக்கியமான இடமாக திகழ்கிறது. அகிலத்திரட்டு அம்மானையில் யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது என்றுதான் போதித்திருக்கிறது. அப்படி என்றால் மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நாமும் இட்டுக் கொள்ளலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை சாமி தோப்புக்கு வரவழைத்து அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தவிர்த்து அவர்களுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அய்யா வழி மக்கள் இயக்கச் செயலாளர் பிரேம் சங்கர், அகில உலக அய்யா வழி சேவை அமைப்பு செயலாளர் சுரேஷ், அகிலம் கல்வி அறக்கட்டளை தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.