நெல் விதை விற்பனையில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை'

நெல் விதை விற்பனையில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் வேளாண் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Update: 2024-01-27 00:50 GMT
நெல் விதை

நெல் விதை விற்பனையில் விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயக மூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில் தனியார் விதை விற்பனையாளர்கள் குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ57, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5 போன்ற கோடை பருவத்துக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்க வேண்டும். தனியார் விதை விற்பனையாளர்கள் தரமான நெல் ரகங்களின் விதைகளைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விதை சட்ட விதிகளின்படி விற்க வேண்டும்.

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் விதை ஆய்வாளர்களால், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் கோடை நெல் சாகுபடிக்கு கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் அலுவலக மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இந்த மாதிரிகள் தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்துக்கு முளைப்புத்திறன் குறித்த ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.

விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிடவேண்டும். கோடை பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News