ரேஷன் கடைகளில் விதிமீறல்; தேர்தல் அலுவலர்கள் கவனிப்பார்களா?
சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர் ரேஷன் கடையில், தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் மறைக்கப்படவில்லை.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள், அரசு அலுவலகம், பயணியர் நிழற்குடை உள்ளிட்டவற்றில், அரசியல் கட்சி பிரமுகர்களின் பெயர்களை தேர்தல் அலுவலர்கள் மறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, சின்னகாஞ்சிபுரம் கே.எம்.வி., நகர் ரேஷன் கடையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் மறைக்கப்படவில்லை. அதேபோல, யாகசாலை மண்டபம் தெருவில் உள்ள ரேஷன் கடையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்படாமல் உள்ளது.