விராலிமலை கோயிலில் லிப்ட் : அதிகாரிகள் ஆய்வு!
விராலிமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லிப்ட் சோதனை செய்யும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விராலிமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிறிய மலைக் குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் வாகனங்களில் சென்று தரிசனம் செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.3 கோடி 80 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பாதை மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டது. மலைப்பாதை பணிகள் நிறைவ டைந்து கடந்த 2021ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.
லிப்ட் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் 2 லிப்ட்களையும் இயக்கி சோதனை செய்யும் பணி நேற்று நடந்தது. பணியை புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவி கோட்ட பொறியாளர் பூபதி, சுற்றுலா துறை அலுவலர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மின் இணைப்பு கிடைத்தவுடன் இந்த லிப்ட் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகா ரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளுடன் திருப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் பூபாலன், உதவி பொறியா ளர் ரதிகலா, சாலை ஆய்வாளர் சின்னம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.