பள்ளிகளில் இடைநிறுத்தம் செய்த மாணவர்களை நேரில் சந்தித்து கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டது குரித்து அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள்;
பள்ளிகளில் இடைநிறுத்தம் செய்த மாணவர்களை சந்தித்த ஆட்சியர்
விருதுநகர் அருகே பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் 800 மாணவர்களை நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்களை கேட்டறியும் கள ஆய்வு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் மற்றும் தாதம்பட்டி பகுதிகளில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சந்தித்து, பள்ளி இடைநிற்றலுக்கான காரணங்களை கேட்டறிந்தார். அதேபோல் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர் ஊராட்சிகள், துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அரசு அலுவலர்கள் தனித்தனியாக இடைநின்ற 800 மாணவர்களை நேரில் சந்தித்தனர்.
இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்ததுடன், மாணவர்கள் கூறிய காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் இடைநின்ற மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.