மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை,மகனுக்கு அரிவாள் வெட்டு - மகன் பலி

திருச்சுழி அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தந்தை மகனை உறவினர் வெட்டியதில் மகன் உயிரிழந்தார், தந்தை படுகாயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினையில் உறவினர் செய்த இந்த வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-30 01:58 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மயிலி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(55). இவர் மயிலி பேருந்து நிறுத்தம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.‌ இவரது மகன் கருப்பையா(30). கருப்பையா சென்னையில் உள்ள தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். கருப்பையாவுக்கு கௌரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.‌ தற்போது குடும்ப பிரச்சனையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.‌ கணேசனுக்கும் மல்லிகை கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர் பாலமுருகன்(35) என்பவருக்கும் இடைய குடும்ப பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.‌

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் குடும்ப பிரச்சினை காரணமாக கணேசனிடம் தகராறு செய்து கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கணேசன் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.‌ இந்த சம்பவம் குறித்து கணேசன் அளித்த புகார் அடிப்படையில் திருச்சுழி போலீசார் பாலமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில் தனது தந்தை திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த கணேசன் மகன் கருப்பையா சென்னையில் இருந்து திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வந்து தனது தந்தை கணேசனை பார்க்க வந்துள்ளார்.‌

இந்நிலையில் நேற்று  காலை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வந்த பாலமுருகன், கணேசனிடமும் அவரது மகன் கருப்பையாவுடனும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வாய் தகராறு ஏற்பட்டு பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கருப்பையாவையும் அவரது தந்தை கணேசனையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ ஆனால் செல்லும் வழியிலேயே கருப்பையா உயிரிழந்தார்.‌ அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.‌ படுகாயம் அடைந்த கணேசன் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மகனை அறிவாளால் வெட்டிய பாலமுருகன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.‌ மேலும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் எந்த ஒரு சிசிடிவி கேமராவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.‌‌ மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனை முன் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை பிணவறை அருகே உயிரிழந்த கருப்பையாவின் மாமியார் பொன்னழகு, கருப்பையா குடும்பத்தாரை குறை கூறியே அழுது புலம்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த கருப்பையாவின் உறவினர்கள் பொன்னழகுவை சரமாரியாக தாக்கினர்.‌ அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News