காவல் துறை சார்பில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
நல்லிபாளையம் அருகே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, வனத்துறை, காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மார்ச் 22-ம் நாள் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வனத்துறை- நாமக்கல் வனக் கோட்டம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்து உள்ள நல்லிபாளையம் காவல் நிலையம் அருகே, உலக தண்ணீர் தினம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட வன அலுவலர் சி. கலாநிதி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. இராஜேஷ் கண்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், புங்கன், பாதாம், வேம்பு, நாவல், இலுப்பை, மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பை வலியுறுத்தியும் உலக தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட வனத்துறை அலுவலர்கள், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம் , தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 29 காவல் நிலையங்களிலும் கோடைகாலத்தில் பாதிக்காத வகையில், பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக குடிநீர் பானைகள் வைக்கப்பட்டன.
மேலும் மாவட்ட வனத்துறை மாவட்ட நிர்வாகம் காவல்துறை சார்பில் அனைத்து காவல் நிலைய வளாகங்களிலும் பசுமை சூழ்நிலை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்படுகிறது என்றும், 29 காவல் நிலைய வளாகங்களிலும் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் பானைகள் வைக்கப்படுகிறது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. இராஜேஷ் கண்ணன் மற்றும் மாவட்ட வன அலுவலர் சி. கலாநிதி ஆகியோர் நம்மிடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை உதவி வனப் பாதுகாவலர் ஷான்வாஸ் கான், வனச்சரக அலுவலர்கள் பெருமாள், இரவிச்சந்திரன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் சுமதி, உதவி காவல் ஆய்வாளர் தமிழ்க்குமரன், வனப் பாதுகாப்பு படை சக்தி கணேசன், வன விரிவாக்க அலுவலர் முருகவேல், மாவட்டக் காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.