அரசு மருத்துவக்கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை; தேர்தல் கமிஷன் தகவல்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.;

Update: 2024-02-23 08:33 GMT

மதுரை மருத்துவ கல்லூரி

 மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு பதிலாக வேறு இடத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க தாக்கலான வழக்கில், அதற்கு சாத்தியமில்லை. 2024 லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை அங்குதான் நடைபெறும், என தேர்தல் கமிஷன் தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கவுன்சில் தலைவர் ராஜ் முகமது உள்ளிட்ட 6 நிர்வாகிகள் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்கிறோம். இக்கல்லுாரியை சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது ஓட்டு எண்ணிக்கை மையமாக இந்திய தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது.அங்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.

Advertisement

அப்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அடிக்கடி வளாகத்திற்குள் ஆய்வு செய்வர். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை 2 முதல் 3 மாதங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.கல்லுாரியின் நிர்வாக அலுவலகம், உடற்கூறியல், உடலியங்கியல், உயிர்வேதியியல் துறை வகுப்பறைகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்துகின்றனர்.

இதனால் அங்கு மாணவர்களை அனுமதிப்பதில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.2024 லோக்சபா தேர்தலின்போது மருத்துவக் கல்லுாரிக்கு பதிலாக வேறு கல்லுாரிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாற்ற இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. தேர்தல் கமிஷன் தரப்பு: மதுரையில் பல கல்லுாரிகளை ஆய்வு செய்தோம்.ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கான தகுந்த இடம் வேறு எதுவும் இல்லை. பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள ஒரே இடம் மருத்துவக் கல்லுாரிதான். 2024 லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை அங்குதான் நடைபெறும்.மாணவர்கள், ஆய்வகம் மற்றும் நிர்வாக பணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்தது.

மேலும்,தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படும். அதற்குரிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை அங்கு மாற்ற வேண்டும், என தேர்தல் கமிஷன் தரப்பு தெரிவித்தது.நீதிபதிகள்: இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்குமாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News