விவிபேட், மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு
திருச்சி மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திலிருந்து பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டன.
திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 6,927 மின்னணு இயந்திரம், 2,556 கட்டுப்பாட்டு இயந்திரம், 2,579 விவிபேட் இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வைப்பறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மேலும், திருச்சி மக்களவைத் தொகுதிக்குள் வரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தா்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு புதுக்கோட்டையிலிருந்து இயந்திரங்கள் வந்திருந்தன.
வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை முடிவடைந்ததைத் தொடா்ந்து திருச்சி வாக்கு எண்ணும் மையத்திலிருந்த 6 பேரவைத் தொகுதிகளில் இருந்த இயந்திரங்களில் கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை இயந்திரங்கள் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் இருந்த இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வைப்பறைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. இதேபோல, கரூா், பெரம்பலூா் மக்களவைத் தொகுதிகளில் உள்ள திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட முசிறி, லால்குடி, துறையூா், மண்ணச்சநல்லூா், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளுக்கான இயந்திரங்களும் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திலிருந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வைப்பறைக்கு புதன்கிழமை காலை கொண்டு வரப்பட்டன.
அதிகாலையே தொகுதி வாரியாக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தனித்தனி லாரிகளில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் இருந்து 6,927 மின்னணு இயந்திரம், 2,556 கட்டுப்பாட்டு இயந்திரம், 2,578 விவிபேட் இயந்திரங்கள் திருச்சி ஆட்சியரகத்தில் உள்ள வைப்பறைக்கு கொண்டுவரப்பட்டன. இவை அந்தந்த தொகுதி வாரியாக உள்ள 9 அறைகளில் தனித்தனியாக வைக்கப்பட்டு அறைக் கதவுகளை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டன