தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்  

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக் கழக ஓய்வு பெற்ற அலுவலர் நிலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஓய்வூதியம் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Update: 2024-04-18 08:01 GMT

காத்திருப்பு போராட்டம்  

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, தமிழ்ப் பல்கலைக் கழக ஓய்வு பெற்ற அலுவலர் நிலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் பெ.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் மா.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு, தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்தையும், துணைவேந்தரையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சுந்தரலிங்கம் கூறியதாவது: தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி பல ஆண்டுகளாக உழைத்து, ஓய்வுபெற்ற பணியாளர்கள் 120 பேருக்கு மாதந்தோறும் ரூ.1.25 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியத் தொகையை வழங்கவில்லை. இதனால் ஓய்வூதியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து துணைவேந்தரிடம் முறையிட்டபோது, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் தான் ஓய்வூதியம் வழங்க முடியும், பல்கலைக் கழகத்தில் நிதி இல்லை என கூறிவிட்டார். இந்த பல்கலைக் கழகம் என்பது கல்வி சார்ந்த சமூகப் பணியை மேற்கொண்டு வருகிறது. இது லாப நோக்கமற்ற ஒரு அமைப்பு. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்போம் எனக் கூறி வரும் தமிழக அரசு, இந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது, கண்டிக்கதக்கது.  எனவே தமிழக அரசு உடனடியாக தமிழ்ப் பல்கலைக் கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதன்பிறகு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News