சேலம் ரயில் நிலையத்தில் காசி தமிழ் சங்க ரயிலுக்கு வரவேற்பு
சேலம் ரயில் நிலையத்தில் காசி தமிழ் சங்க ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;
புனித யாத்திரை செல்லும் பயணிகள்
கோவையில் இருந்து காசி தமிழ் சங்கமத்திற்கு சென்ற சிறப்பு ரயிலுக்கு, சேலம் ஜங்சனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலமாக, ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி, கோவையிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் 2வது ரயில் நேற்று காலை கிளம்பியது.
கோவையிலிருந்து புறப்பட்ட 36 பயணிகளுக்கும், அங்கு வாழ்த்திவழியனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சேலம் ஜங்சனுக்கு வந்த இந்த ரயிலில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 46 பேர் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக, சேலம்ரயில்வே கோட்ட நிர்வாகம் மற்றும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை ஆகியோரது தலைமையில், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சுதிர் முருகேசன், நிர்வாகிகள் ராஜ்குமார். ரமேஷ், அபிராமி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.