மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்..
Update: 2024-02-19 16:06 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 710 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.