ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் எம்.எஸ் விழா அரங்கில், ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக மருத்துவர் ஏ.ரவிச்சந்திரன், செயலாளர் ஆர்.செந்தில்குமார், பொருளாளராக டி.வீரராகவன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பணியேற்றனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.எஸ்.ரமேஷ்பாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உதவி ஆளுநர் பி.சிவச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், 6 ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், அறந்தாங்கி வள்ளலார் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், ஐந்து பெண்களுக்கு ஆடைகள், பள்ளிக் குழந்தைகள் இருவருக்கு கல்வி உதவித்தொகை என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், ரோட்டரி சங்கம் சார்பில் உயர் கல்வி முடித்த இரு மாணவிகளின் தாயாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், முன்னாள் தலைவர் எம்.திருப்பதி, முன்னாள் செயலாளர் கே.முத்துக்குமார், முன்னாள் பொருளாளர் ஆர்.சதீஷ் மற்றும் சங்க இயக்குனர்கள், பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.