மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 92 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
Update: 2024-02-07 10:53 GMT
சமூகம், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவே இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளை புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வதற்கும், அவர்களின் பங்களிப்புகளை கொண்டாடுவதற்கும் இவ்விழா ஒரு சிறந்த முன்னுதாரணமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இத் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்திடும் பொருட்டு இத்தினவிழா நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசால் இவ்வாண்டு முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வந்த ரூ.1,500/- பராமரிப்பு உதவித்தொகையினை ரூ.2,000/- ஆக உயர்த்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், திறன் பேசிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கிட 45 வயதிலிருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு மாற்று திறனாளி நபர்களுக்கான திருமண உதவித் தொகை ஏழு நபர்களுக்கும் , 10 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் , 62 கைபேசிகளையும் , பத்து பேருக்கு வங்கி கடன் மற்றும் மூன்று நபர்களுக்கு காதொலி கருவி என மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூபாய் 2.16 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் அன்பரசன் , திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வருமான உச்ச வரம்பின்றி கல்வித்தகுதியின் அடிப்படையில் ரூ.25,000/- மற்றும் தம்பதிகளில் ஒருவர் பட்டதாரியாக இருந்தால் ரூ.50,000/- மும் வழங்கப்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும், இதர மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து கல்லூரி/பணிக்கு/மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 628 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கலைச்செல்வி , மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , மேயர் மகாலட்சுமி , மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்யா, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி , வாலாஜாபாத் ஒன்றி குழு தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.