புதர்மண்டிய நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எப்போது?

புதர்மண்டிய நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Update: 2024-05-16 14:50 GMT

கால்வாயை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு 

ஆந்திர மாநிலத்தில் உருவாகும் கொசஸ்தலையாற்று நீர், தமிழகத்தின் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியத்தை கடந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.

திருவாலங்காடு ஒன்றியம் ஓரத்துார் கொசஸ்தலையாற்றில் இருந்து மருதவல்லிபுரம் வழியாக, மணவூர் ஏரிக்கு செல்ல நீர்வரத்து கால்வாய் உள்ளது. பொதுப்பணித் துறையின் கீழ் வரும் இந்த கால்வாய், 3 கி.மீ., நீளமும், 3-10 மீட்டர் அகலமும் உடையது. இந்த கால்வாய் 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளதால், ஆங்காங்கே துார்ந்தும், புதர்மண்டியும் காணப்படுகிறது.

தற்போது ஓரத்தூர் பகுதியில் சேகரமாகும் கழிவுநீரும், இந்த கால்வாயில் விடப்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இந்நிலையில், கால்வாய் ஆங்காங்கே தூர்ந்துள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் ஏரிக்கு நீர் செல்வதில்லை.

இதனால், விவசாயிகள் மூன்றாம் போகத்தில் நீரின்றி சிரமப்படுகின்றனர். இந்த நீர்வரத்து கால்வாயை மீட்டு, துார்வாரி சீரமைப்பதன் வாயிலாக, 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

எனவே, இந்த நீர்வரத்து கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News