வாரிசு சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

கரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, வாரிசு சான்றிதழ் கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-08 11:27 GMT

கரூர் அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா- குப்புசாமி தம்பதிகள். குப்புசாமி எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு குப்புசாமியின் தாய், தந்தை காலமாகிவிட்டனர். காலமாகிவிட்டவர்களின் இறப்புச் சான்றிதழை பெற்று, வாரிசு சான்றிதழ் கேட்டு கரூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு கூறிய ஆலோசனையின் பேரில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் பெற்று பதிவேற்றம் செய்துள்ளார் ஷர்மிளா மற்றும் குப்புசாமி. வாரிசு சான்றிதழ் அளிக்காமல் அலை கழிக்கும் நோக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துள்ளனர். பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை ஆன்லைனில் அழித்துவிட்டு, அழிந்து விட்டதாக கூறி மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதுபோன்று மூன்று முறை பதிவேற்றம் செய்த பிறகும் மீண்டும் அழிந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாரிசு சான்றிதழ் அளிக்கும் வரை உண்ணாவிரத போராட்டம். என ஒரு சார்ட்டில் எழுதி அருகாமையில் வைத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, ஷர்மிளாவிடம் வந்து விண்ணப்பம் செய்த ஆவணங்களை மீண்டும் கேட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆயினும் வாரிசு சான்றிதழ் அளிக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என சர்மிளா கூறியதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்றாலும், அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்காமல் அந்த காரியங்களை அவர்கள் நடத்திக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News