சாலையில் தேங்கிய கழிவுநீரில் விழுந்து பெண் படுகாயம்

சேலம் மாவட்டம், தாராபுரம் பகுதியில் பெண் சாலையில் தேங்கிய கழிவுநீரில் விழுந்து படுகாயமடைந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-05-14 10:26 GMT

போராட்டம் 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாராபுரம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாக்கடை கால்வாய் முழுமையாக கட்டப்படாததால் கிராமத்திலேயே கழிவுநீர் தேங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் ஓமலூர், சின்னத்திருப்பதி செல்லும் சாலையிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதற்கிடையே கழிவுநீர் தேங்கும் பகுதியில் குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறப்படுகிறது.

மேலும் கிராமத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்நிலையில் தாராபுரம் பஸ் நிறுத்தம் அருகே மொபட்டில் சென்ற பெண் ஒருவர் தேங்கிய கழிவுநீரில் வழுக்கி விழுந்து பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கும் இடத்தில் கற்களை அடுக்கி வைத்து போக்குவரத்தை நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலையில் வைத்திருந்த கற்களை அகற்றி மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News