மகளிர் தொழில் முனைவோர் தேர்வு முகாம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் மாவட்ட தொழில் மையத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-11 07:51 GMT
 மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான "வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது" ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவைக்கு வழிகாட்டவும், வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நமது விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டமானது 4 வட்டாரங்களில் 184 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக் கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை “மதி சிறகுகள் தொழில் மையம்” மூலமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது.

தொழில் நிறுவன வளர்ச்சியின் அளவிற்கு ஏற்ப சந்தைப்படுத்துதல், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள் தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது. இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிர் தொழில் முனைவோருக்கு குறிப்பாக கிராமப்புற மகளிர் தொழில் முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேற்க்கண்ட சிறப்பான சேவைகளை பெற பெண்கள் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நமது மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வருகின்ற 19.02.2024 அன்று திங்கட்கிழமை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறுகிறது.

ஆகவே நமது மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும், ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தொழில் கனவுகளை அடையலாம். இம்முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் திருமதி. சு. இராஜாத்தி அவர்களை 9489989425 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது 2ம் தளம், பூமாலை வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், விருதுநகர் 626001 என்ற முகவரியில் நேரிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள 15.02.2024-ம் தேதிக்கு முன்பாக கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும். தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News