மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், விவசாய நிலத்திற்கு பாதை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி அமைத்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி குடிகாடு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தூர்வாரும் பணிகளில் மணல் கொள்ளை நடப்பதாகவும், விவசாய நிலத்திற்கு பாதை வசதி மற்றும் மலட்டு ஏரி அருகே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை பலமுறை வைத்தும் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 300 -க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது இரண்டு நாட்கள் கால அவகாசம், கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் இரண்டு நாட்களைக் கடந்தும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, இன்று காலை மேலணிக்குழி காட்டுமன்னார்குடி குடிகாடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலன் கிடைக்கவில்லை. இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் வெயில் என்று பாராமல் மக்கள் சாலையில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் நூதன முறையில் போராட்டத்தை நடத்திக் கொண்டு கலையாமல் இருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்ததால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்கள் என்பதால் போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதனிடையே போலீசார் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில்,
பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் அடுத்த கட்டமாக காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணி தொடர்ந்து தற்பொழுது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இன்நிலையில் அடுத்த கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மனு கொடுத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். .