கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா
மார்த்தாண்டம் அருகே தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரி மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிஷா.இவருக்கு பாகோடு பகுதியை சேர்ந்த மினிபஸ் கண்டக்டரான சதீஷ் மோன் என்பவருடன் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 10 லட்சம் ரூபாய் வர தட்சணையாக கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், திருமணமான முதல் வருடத்தில் இவர்களுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடன் ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது. அதன் பிறகு சதீஷ்மோன் மற்றும் அவரது பெற்றோர் அபிஷாவிடம் தகராறில்ஈடுபட்டு வந்ததோடு கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து உள்ளனர்.
இதற்கு இடையே அபிஷா மீண்டும் கர்ப்பம் தரித்தார். இதை அடுத்து சதீஷ்மோன் அபிஷாவை பிரசவத்திற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு உள்ளார்.இந்நிலையில், அபிஷாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. அதிலும் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாக பிறந்ததை தொடர்ந்து, கணவர் வீட்டிற்கு வந்த அபிஷாவை சதீஷ் மோன் அடித்து சித்திரவதை செய்து வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.இதை அடுத்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த அபிஷா கணவருடன் சேர்ந்து வாழ வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபடி துணிக்கடைக்கு வேலைக்கு சென்று தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில், சதீஷ்மோன் மனைவிக்கு தெரியாமலும், நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்காமலும் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த அபிஷா தனக்கு நீதிகேட்டு கணவர் வீட்டின் முன் தனது குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அமர்ந்து போராட்டத்தில்பட்டார். அங்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.