சேலத்தில் பட்டப்பகலில் தொழிலாளிக்கு கத்திக்குத்து

சேலத்தில் பட்டப்பகலில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2024-01-25 02:10 GMT
பைல் படம்

சேலம் பெரமனூர் அருகே கோவிந்தகவுண்டர் தோட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35), கூலித்தொழிலாளி. அவர் நேற்று காலை பெரமனூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம் அருகே மர்ம நபர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு தலை, மார்பு உள்ளிட்ட 3 இடங்களில் பலமாக கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் அங்கேயே கீழே சரிந்தார். இதனிடையே அவரை கத்தியால் குத்திய மர்ம நபர் அங்கிருந்தவர் தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

மேலும் சதீஷ்குமாரை கத்தியால் குத்திய நபர் யார்? என்பது குறித்தும், அவர்களுக்குள் எதற்காக தகராறு ஏற்பட்டது? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News