கல்லூரியில் உலக காடுகள், தண்ணீர் தினங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் தண்ணீர் தினங்களை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி சுற்றுச்சூழல் மற்றும் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கலாநிதி கலந்து கொண்டு நம் நாட்டின் வன வளங்கள் பற்றியும் வன வளங்களை பராமரிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் சமீப காலங்களில் மனிதர்களுக்கும் வன உயிரினங்களுக்கும் இடையேயான மோதல் போக்கினை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை குறித்தும் குறிப்பாக இக்கோடை காலங்களில் காட்டுத் தீயினை எவ்வாறு பரவவிடாமல் தவிர்க்கலாம் என்றும் மாணவ மாணவியர் கோடை காலங்களில் தங்கள் அருகாமையில் இருக்கின்ற வனப்பகுதியில் தீ விபத்தினை உடனுக்குடன் வனத்துறையினருக்கு தெரிவித்து வனவளங்களை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். உலக காடுகள் தினம் மற்றும் தண்ணீர் தினத்தினை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வன உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், பல்லுயிர் பரவல் கொண்ட பாரதம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், தண்ணீர் சேமிப்பு என்ற தலைப்பில் வார்த்தை ஜாலங்கள் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், உதவி வனப் பாதுகாவலர் ஷானுவாஸ்கான் , நாமக்கல் வனச் சரகர் பெருமாள், ராசிபுரம் வனச் சரகர் ரவிச்சந்திரன், நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் விலங்கியல் துறை தலைவருமான இராஜசேகர பாண்டியன் மற்றும் கல்லூரி பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளரும் தாவரவியல் துறை இணை பேராசிரியருமான வெஸ்லி செய்திருந்தனர்.