கல்வடங்கம் காவிரியில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து வழிபாடு
சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரியில் புனித நீராடி 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
Update: 2024-02-09 08:25 GMT
சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை பகுதியில் சேலம்,ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரியில் புனித நீராடினர். இதனையெடுத்து காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் அதிகாலை முதலே அங்காளம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய,திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ அங்காளம்மனை வழிபட்டுச் சென்றனர்.