இளைய சமுதாயத்தினர் அரசியல் மாற்றத்தை உணர்ந்து வாக்களிக்க - சீமான் பேச்சு

அருமனை பிரச்சாரத்தில் இளைய சமுதாயத்தினர் அரசியல் மாற்றத்தை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என சீமான் பேச்சு.

Update: 2024-03-28 10:04 GMT

சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜனீபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெமினியை ஆதரித்து அருமனையில் திறந்த ஜீப்பில் சென்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும் என்றார். இதனை நம்பி நாம் ஓட்டை போட்டோம். ஆனால் ஏதாவது நடந்ததா?. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக கூறுகிறார்கள். ஆனால் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நம் நாட்டை தூக்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை. இந்த நிலை மாறத் தேர்தல் உள்ளது. மாறுதலாக இருக்க வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது. நாட்டின் வருவாய் பெருக்கத்திற்கு வரி வரி என விதித்து அடித்தட்டு மக்களை சுரண்டி வருகின்றனர். அதானி அம்பானி மனைவிக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ அதனையே சாமான்யனும் கட்ட வேண்டிய நிலை உள்ளது. வாக்கு என்பது ஜனநாயகத்தின் வலிமை மிக்க ஆயுதம். அதனை அனைவரும் சரியாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் இதனை உணர்ந்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். வாக்குறுதி வார்த்தைகளுக்கு மயங்கி விடாதீர்கள். குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் உடைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க எந்த கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி நான்கு முறை போராட்டம் நடத்தியுள்ளது. நானே நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். கனிமவள கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களத்தில் உள்ள அன்பு சகோதரி மரிய ஜெனிபருக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெமினிக்கும் உங்களது ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News