குவைத் தீ விபத்தில் இறந்த இளைஞர்: குடும்பத்துக்கு எம்பி,எம்எல்ஏ ஆறுதல்
குவைத் தீ விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுதல் கூறினர்.
குவைத் நாட்டில், மங்காஃப் என்ற இடத்தில், இந்திய தொழிலாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆதனூரை சேர்ந்த ஆனந்த மனோகரன் - லதா தம்பதியரின் மூத்த மகன புனாஃப் ரிச்சர்ட் ராய் (27) உயிரிழந்தார்.
இவருடைய உடல் குவைத் நாட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் உயிரிழந்த வாலிபர் புனாஃப் ரிச்சர்டு ராய் இல்லத்திற்கு சென்று,
அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். அவர்களை ஆறுதல் படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து துயரச்சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் புனாஃப் ரிச்சர்ட் ராயின் பெற்றோர், "தாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், தங்களது இளைய மகன் ரூசோவுக்கு (25) அரசு வேலை பெற்றுத் தர வேண்டும்.
குவைத் நாட்டில் தங்கள் மகன் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்" என்று கூறி கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களிடம் உறுதியளித்தனர்.
அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரூஸ்வெல்ட், அ.அப்துல் மஜீத், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், தென்னங்குடி ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.