இளைஞர் கொலை சம்பவம் - தப்பியோடிய உறவினர் கைது

இளைஞரை வெட்டி கொலை செய்து, அவரது தந்தையையும் வெட்டி காயப்படுத்தி தப்பி ஓடிய உறவினரை திருச்சுழி போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-30 08:48 GMT

பாலமுருகன்

விருதுநகர் மாவட்டம்‌ திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(55). இவர் அதே கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கருப்பையா (30) சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கருப்பையாவுக்கு கௌரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கௌரியை பிரிந்து கருப்பையா வாழ்ந்து வந்தார்.

கணேசனுக்கும் அதை ஊரை சேர்ந்த அவரது உறவினர் பாலமுருகன் (35) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் நேற்று முன்தினம் பாலமுருகனுக்கும் கணேசனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்ததாகவும் காயமடைந்த இருவரும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. தனது தந்தை காயமடைந்ததை அறிந்த கணேசன் மகன் கருப்பையா சென்னையில் இருந்து தந்தையை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை சென்று உள்ளார்.‌

அப்போது தனது தந்தையை பார்த்து மருத்துவமனை வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலமுருகன் என்பவர் கணேசன் அவரது மகன் கருப்பையா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றி பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனையும் அவரது மகன் கருப்பையாவையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் கருப்பையா உயிரிழந்தார்.

அவரது தந்தை கணேசன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாலமுருகனை தேடி வந்தனர். விசாரணையில் அம்மநெறி காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் கணேசனுக்கும் பாலமுருகனுக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக பாலமுருகன் அரிவாளை மருத்துவமனை வளாகத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பாலமுருகனை திருச்சுழி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் பாலமுருகனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக அவரது கூட்டாளிகள் செம்பொன்நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் திருச்சுழியை சேர்ந்த மனோஜ் குமார் ஆகிய இருவரும் மீது வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News