தங்கமணியை வெல்ல ஈரோடு முத்துசாமி தீவிரம் எம்.பி. பிரகாஷ் பேச்சு

குமாரபாளையத்தில் ஈரோடு எம்.பி. பிரகாஷ் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார்.

Update: 2024-07-15 14:15 GMT
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்றார். இதற்கு நன்றி சொல்லும் விதமாக நடைபெற்ற கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது. மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். வடக்கு மற்றும் தெற்கு நகர பொறுப்பாளர்கள் விஜய்கண்ணன், ஞானசேகரன், உள்ளிட்ட பலரும் வாழ்த்தி பேசினார்கள். எம்.பி. பிரகாஷ் பேசியதாவது: என் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். குமாரபாளையம் தங்கமணியின் கோட்டை என்ற நிலை தற்போது இல்லை. இந்த தேர்தலில் அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் சொல்லும் அந்த உண்மையை. இன்னும் கொஞ்சம் அயராது உழைத்தால் சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வசமாகும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதிலும் தி.மு.க. வெற்றி பெறும். செல்லும் இடமெல்லாம் தங்கமணி எதுவும் செய்யவில்லை என்றுதான் தாய்மார்கள் சொல்லி வருகிறார்கள். அங்காளம்மன் கோயில் பின்புறம் காவிரி ஆற்று படித்துறை 20 வருடமாக கேட்டும் தங்கமணி எதுவும் கண்டுகொள்ளவில்லை. மேலும் தி.மு.க. என்பதால் எங்களை தங்கமணி புறக்கணித்து வருவதாகவும் பெண்கள் கூறுகிறார்கள். எனக்கு எல்லாரும் ஒன்றுதான். எனது எம்.பி. நிதி ஒதுக்கீட்டில் படித்துறை கட்டப்படும். இதுதான் என் முதல் பணி. தங்கமணி என்ன செய்து விட்டார்? ஈரோட்டில் முத்துசாமி செய்யாததா? முத்துசாமி குமாரபாளையம் பகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து, குமாரபாளையம் தொகுதியை தி.மு.க.வின் கோட்டையாகக் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். நாங்களும், நீங்களும் சேர்ந்து உழைத்து, குமாரபாளையம் தொகுதியை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எம்.பி. பிரகாஷ் கூறியதாவது: ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 தொகுதிகளிலும் குமாரபாளையம் தொகுதிதான் முதலில் அதிக ஓட்டுக்கள் வாங்கிய தொகுதியாக வரவேண்டும் என எண்ணினேன். ஆனால் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அதிக ஓட்டுக்கள் பெற்றது. தங்கமணி எனும் மாயை அகன்று, தி.மு.க. இந்த தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி நிச்சயம். சாயப்பட்டறை பிரச்சனை தீர, விரைவில் 300 கோடி ரூபாய் செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மூத்த நிர்வாகிகள் மாணிக்கம், ஜெகந்நாதன், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா, சி.பி.ஐ. கணேஷ்குமார், சி.பி.எம். சக்திவேல், தி.க. சரவணன், பெரியார் திராவிட கழகம் தண்டபாணி, ம.தி.மு.க. நகர செயலர் நீலகண்டன் உள்பட பெரும்பாலோர் பங்கேற்றனர்.

Similar News