கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் நடவடிக்கை
மயிலாடுதுறை அருகே இரண்டு குடும்பத்தினர் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மனை வரி தோராய பட்டா பட்டா பெற்ற இடத்தை கோயிலுக்கு சொந்தமான இடம் என்று கிராம மக்கள் கட்டாயப்படுத்தி பிடுங்க முயற்சிப்பதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்; 27 வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 45 ஆண்டுகளாக பூசாரி வேலை செய்து வந்த அப்பாதுரை என்பவர் கஞ்சாநகரம் கிராம சமுதாய மத தர்ம பரிபாலன ட்ரஸ்ட்க்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறார். அதன் பிரதிபலனாக அப்பாதுரை குடியிருந்து வரும் இடத்திற்கு 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு மனைவரி தோராய பட்டா வழங்கியுள்ளது. தான் குடியிருந்து வரும் இடத்தில் அப்பாதுரை பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்து தற்போது மரமாக உள்ளது. இந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து பல வருடங்களாக குடியிருந்து வரும் நிலையில் சிலர் கோயில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறி பிரச்சனை செய்ததால் மயிலாடுதுறை முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடம் தனக்கு சொந்தம் என்று தீர்ப்பு பெற்றுள்ளார். தற்போது அந்த இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் தூண்டுதலின் பேரில் இடத்தை காலி செய்ய சொல்லி, அங்கிருந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் கிராமமக்கள் ஒன்றுகூடி வெட்டி அகற்றி விட்டதாகவும், கிராமமக்கள் தங்களை தாக்க முயற்சிப்பதாகவும், இந்த இடப்பிரச்சனை காரணமாக 27 வருடங்களாக ஊரைவிட்டு ஓதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்னை சார்பாக கிராமமக்கள் தரப்பில் கோயிலுக்கு பூசாரியாக வந்த அப்பாதுரை கஞ்சாநகரம் கிராம சமுதாய மத தர்ம பரிபாலன ட்ரஸ்ட்க்கு சொந்தமான 1 ஏக்கர் 100 சென்ட் பரப்பளவு உள்ள இடத்தில் அரசு மனைவரி தோராய பட்டா பெற்ற இடத்துடன் கோயிலின் இதர இடங்களையும் ஆக்ரமித்து வைத்து கொண்டு மரம் வளர்த்து சொந்தம் கொண்டாடுவதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள இடத்தை கிராமமக்கள் கேட்கவில்லை என்றும் ஆக்ரமித்து ஆண்டு அனுபவித்த கோயில் இடத்தை விட்டுதர மனமில்லாமல் கிராமமக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்து நாடகமாடும் குடும்பத்தினர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வதாகவும், 48 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற தீமிதி திருவிழாவிற்கு இடையூராக இருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டியதாகவும் தெரிவித்தனர்.