மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் ஒட்டுமொத்த ரயில் கோரிக்கைகளை வைத்த எம்பி சுதா

ரயில்வே கோரிக்கைகள்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. ஆர்.சுதா மனு படவிளக்கம்: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளிக்கும் மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா

Update: 2024-08-06 08:39 GMT
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ரயில் பயணிகளின்; நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர்; ஆர்.சுதா திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலையங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர இப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு நீண்ட காலங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த எம்.பி. ஆர்.சுதா இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து அவற்றை நிறைவேற்றித் தர வலியுறுத்தினார். அம்மனுவில் அவர் கோரியது: மயிலாடுதுறையில் இருந்து சேலம் மற்றும் திருச்சி செல்லும் ரயில்கள் (எண்: 16811, 16812 மற்றும் 16833, 16834) மெமு ரயில்களாக மாற்றப்பட்டு 8 பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமல் நின்றுகொண்டே செல்ல வேண்டியுள்ளதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்;த ரயில்களில் 4 முன்பதிவில்லா பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் ரயில் (எண்: 06692, 00690, 06694) மற்றும் திருவாரூரில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில் (06689, 06690) ஆகியவற்றை சென்னை தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணத்தில் அனைத்து ரயில்களையும் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்குடிக்கு மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் சேவை வழங்க வேண்டும், மயிலாடுதுறையில் இருந்து பழனிக்கு ரயில் சேவை வழங்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கும், அதேபோல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கும் பகல் நேரத்தில் சேர் கார் வசதியுடன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாப்படுகை, நீடூர் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் ரயில்வே கேட் போடப்படுவதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரயில்வே துறையால்; 2017-ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் வழங்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே ஏற்கெனவே இயங்கி வந்து, 1990-ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை இரட்டை வழித்தடமாக மாற்றி, காரைக்கால் வரை நீட்டித்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தினார். மேலும், அம்ரித் பாரத் திட்டத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் விரிவாக்கப் பணி மந்தகதியில் நடைபெறுவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் என்பதை கூறி, அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தார். மனுவைப் பெற்றுக்கொண்டு படித்துப் பார்த்த ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ள கோரிக்கைகளை விரைந்தும், மற்ற கோரிக்கைகளை ஆலோசித்தும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

Similar News