அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. . இவ்விழாவை கல்லூரியில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் காணொளி மூலம் கண்டு களித்தனர். அதனைத் தொடர்ந்து 304 தமிழ் புதல்வன் பயனாளர்களுக்கு கல்லூரி முதல்வர் ரேணுகா, தமிழ் புதல்வன் வங்கிக் கணக்கு அட்டையை வழங்கி வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் ரேணுகா பேசியதாவது; தமிழக முதல்வர் அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கி மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவியது போல, மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் மாதம் தோறும் வழங்குவது அவர்களின் கல்வி நலன் மேம்படுவதற்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். மாணவ, மாணவிகள் இதனை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது கல்வி மேம்பாட்டிற்காக மட்டும் இத்தொகையை செலவழிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.