உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு.
சிவகங்கையில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான குளிர்பானங்கள் கொட்டி அளித்ததுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காந்தி வீதியில் உள்ள பிரபல மால் மற்றும் அதன் சுற்றியுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்டிக்கடைகளில் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கீழே கொட்டி அழித்தார். மேலும் காலாவதியான குளிர்பானங்களை விற்றதாக இரு கடைகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்தார். தொடர்ந்து அருகில் செயல்பட்டு வந்த பிரியாணி கடையில் ரசாயன வண்ண பொடிகள் கலந்திருப்பதை கண்டுபிடித்தவர், உணவக உரிமையாளரிடம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அப்போது வாடிக்கையாளர்கள் காலாவதியான பொருட்களை உட்கொண்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தவர், வாங்கும் பொருள்களின் காலாவதி தேதி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், கலர் ரசாயன பொடி சேர்க்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தெரிவித்தார்.