மனுக்களுடன் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனுக்களுடன் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-08-21 19:15 GMT
ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் பூங்கொடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசார், பணி நிமித்தமாக நிலக்கோட்டை தாலுகாவுக்கு மாவட்ட ஆட்சியர் சென்று இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்துவிட்டு செல்லும்படியும் விவசாயிகளிடம் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்காத விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் சார்பில் சிலர் மட்டும் சென்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமாரிடம் கோரிக்கை குறித்து தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து விவசாயிகள் சார்பில் சிலர் சென்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை குறித்து தெரிவித்தனர். அதாவது, கடந்த பல ஆண்டுகளாக கண்வலி விதை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களிடம் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கண்வலி விதைகளை வாங்கிச்சென்றனர். இந்த நிலையில் கடந்த ஒராண்டாக ஒரு தனியார் நிறுவனம் நேரடியாக எங்களிடம் கண்வலி விதைகளை கட்டுப்படியான விலைக்கு வாங்கிச்சென்றது. ஆனால் கடந்த வாரத்தில் சிலர் அந்த நிறுவனம் எங்களை மோசடி செய்துவிட்டதாகவும், அந்த நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் அதில் உண்மை இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கை குறித்து மனுவையும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்தனர். மனுவை பெற்ற கோட்டைக்குமார் உரிய விசாரணை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News