புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் காவல் படை துவக்கம்
44 மாணவர்கள் ஆர்வத்துடன் இணைந்தனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவல்லி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாராயணசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா பாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவர் காவல் படை பொறுப்பாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். விருத்தாசலம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர் காவல் படையை தொடங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். குற்ற செயல்கள் அதிகரித்து வரும் வேளையில் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில் பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வையும் நற் சிந்தனையையும் வளர்க்க கல்வித்துறை காவல்துறை இணைந்து பள்ளி மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த மாணவர் காவல் படையில் 44 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து இதில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிராக பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.