பெண் காவலா்களுக்கு புதிய சலுகை: முதல்வருக்கு எம்.பி. நன்றி!

பெண் காவலா்களுக்கு புதிய சலுகை: முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்தார்.

Update: 2024-08-25 05:10 GMT
மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலா்களுக்கு புதிய சலுகையுடன் அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், காவல்துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது. மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

Similar News