அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பி, தம்பி மனைவி மீது வழக்கு
இடம் வாங்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
விருத்தாசலம் அடுத்த கோமாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 65), விவசாயியான இவரது மகன் பூலோகம் என்பவர் 51 அரை சென்ட் நிலம் வாங்குவதற்காக தன்னுடைய தந்தையின் தம்பி சிவபெருமாள், அவரது மனைவி மகாலட்சுமியிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூபாய் ஒன்பது லட்சத்து 19 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் இடத்தை கிரயம் செய்து கொடுப்பதற்குள் பூலோகம் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று பூலோகத்தின் தந்தை வெங்கடேசன் தனது தம்பியிடம் இடத்தை கிரயம் செய்து கொடு, அல்லது எனது மகன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவபெருமாள் அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் சேர்ந்து வெங்கடேசனை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடேசன் கம்மாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.