விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவிக்க வந்த மக்களை அதிகாரிகள் அலைக்கழித்ததால் ஆத்திரம்

Update: 2024-09-02 10:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் அங்கன்வாடி மையம் அருகில் சுமார் 6 அரை சென்ட் அரசு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக தெரிகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் அவர் கட்டிடத்தை கட்டி வருகிறார். இதுகுறித்து அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து அரசு புறம்போக்கு இடத்தில் கட்டிடம் கட்டி இருந்தால் அதனை அகற்ற வேண்டும் என உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த உத்தரவுகளை வைத்து கொண்டு இன்று விருத்தாசலம் தாலுக்கா அலுவலகம் சென்று தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு தாசில்தார் எங்களுக்கு எதுவும் உத்தரவு வரவில்லை, இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்குமாறு அவர் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று முறையிட்டனர். அதற்கு அவர்கள் இடத்தை அளவீடு செய்து புறம்போக்கு இடத்தில் கட்டிடம் இருந்தால் அதை அகற்ற வேண்டும் என வந்த உத்தரவை வருவாய் வட்டாட்சியர் தான் முடிவெடுக்க முடியும். அதனால் தாலுகா அலுவலகம் செல்லுங்கள் என கூறியுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் தாசில்தாரும் பொதுமக்களை அலைக்கழித்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விருத்தாசலம்-கடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தாசில்தாரிடம் கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம்-கடலூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News