விருத்தாசலத்தில் காகித கூழில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்குத் தயார்

பெரிய லாபம் இல்லை என உற்பத்தியாளர்கள் கவலை

Update: 2024-09-02 11:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலகம் முழுவதும் வருகின்ற 6 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அந்த வகையில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, ஆலடி, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். வீதி வீதியாக விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் அருகில் உள்ள குளக்கரை, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்து வழிபாடு செய்வார்கள். அதற்காக விநாயகர் சிலைகள் மண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்து உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். விருத்தாசலம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் இந்த விநாயகர் சிலை உற்பத்தி பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். கடந்த தை மாதம் சங்கடகர சதுர்த்தி முதல் விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்து வரும் அவர் கூறியதாவது:- 2 அடி முதல் 9 அடி வரை காகித கூழை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்துள்ளோம். நாங்கள் ரசாயனத்தை கலப்பதில்லை. கூழாங்கல் மாவு, பேப்பர் அட்டை தூள், சிமெண்ட் பேப்பர், மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைத்து அதனை கூழாக்கி அச்சில் வார்த்து தண்ணீரில் எளிதில் கரையும் வண்ணம் உற்பத்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு சிலைக்கும் வாட்டர் கலரில் வர்ணம் பூசி உள்ளோம். அடி 1200 முதல் 2000 வரை விற்பனையாகும். 9 அடி சிலை ரூபாய் 18000 வரை விற்பனையாகும்.  கடந்த எட்டு மாதங்களாக 80 விநாயகர் சிலைகளை இதுவரை உற்பத்தி செய்துள்ளோம். 8 மாத உழைப்புக்கு இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் தான் நாங்கள் போட்ட பணத்தை எடுக்க முடியும். இதற்காக பத்து ஆட்கள் வேலை செய்துள்ளனர். அவர்களுக்கான ஊதியம், என் குடும்பத்திற்கான செலவு போக இதில் அவ்வளவு பெரிய லாபம் கிடையாது. நாங்கள் கூறுகின்ற விலையில் சிலைகளை வாங்கினால் தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். ஆனால் சிலைகளை வாங்க வருபவர்கள் தாறுமாறாக விலைகளை குறைத்து பேசி வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் எங்களுக்கு அதிகம் லாபம் கிடைக்காது, என கவலையுடன் தெரிவித்தார்.

Similar News