தென்னை மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தென்னை மட்டை பறிக்க தென்னை மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி விநாயகர் கோவிலை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் சூர்யா வயது 24.இவர் தனியார் உணவு விடுதியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சூர்யா மாலை அவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி தென்னை மட்டையை பறிக்கச் சென்றார். அப்போது தென்னை மரத்தின் வழியாக சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் சூர்யாவை தாக்கியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னை மட்டையை பறிக்க மரத்தில் ஏறிய வாலிபர் மீது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.