விழுப்புரம் கம்பன் நகரில் பொதுமக்கள் திடீர் தர்ணா
விழுப்புரம் கம்பன் நகரில் பொதுமக்கள் திடீர் தர்ணா
விழுப்புரம் கம்பன் நகர் பகுதியில் பொதுமக்கள் திடீரென போராட்டம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் நகராட்சி விரிவாக்க பகுதியில், தற்போது பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 30வது வார்டு கம்பன் நகர் பகுதியில் 10 தெருக்கள் உள்ளனர். இதில், 9 தெருக்களில் மட்டும் பாதாள சாக்கடைக்காக பைப் லைன் புதைத்துள்ளனர்.கம்பன் நகர் பாரதி தெருவில் மட்டும் பாதாள சாக்கடை திட்டப்பணி விடுபட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், பிரச்னை தீரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நேற்று காலை 11:30 மணியளவில் அப்பகுதியில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.இப்பிரச்னை குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் குடிநீர் வரி, வீட்டு வரி முறையாக செலுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளாவிட்டால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும், எங்கள் தெருவிலேயே தேங்கி நிற்கும்.எங்கள் தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால், நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம் என்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.